
ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 22 — பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் (PHEB) சார்பில் உருவாக்கப்பட்ட புதிய கோயில் தேர், வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று, விஜயதசமி புனித நன்னாளில் மாலை 6.30 மணிக்கு ஜார்ஜ் டவுன் குயின் ஸ்ட்ரீட் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பாரம்பரிய காரைக்குடி பாணியில் எண்கோண அடித்தளத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த தேர், சுமார் 23 அடி உயரமும், 9 அடி அகலமும், 6 டன்களுக்கு மேற்பட்ட எடையையும் கொண்டதாகும்.
தேக்கு மரங்களால் உருவாக்கப்பட்ட இத்தேர் சுமார் 200,000 ரிங்கிட் செலவில் கட்டப்பட்டதெனவும் கருணை நெஞ்சம் கொண்ட நன்கொடையாளர் ஒருவரின் முழுமையான நிதியுதவியால் இதனை வெற்றிகரமாக கட்டி முடித்தனர் என்றும் அறியப்படுகின்றது.
வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஷ்வரன் சக ஆணையர்களுடன் இணைந்து தேர் நிறுவலை நேரில் ஆய்வு செய்ததுடன் இத்திட்டத்தை வடிவமைத்து சிறப்பாக நிறைவேற்றிய குயின் ஸ்ட்ரீட் மகாமாரியம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும், குறிப்பாக ஆலய தலைவர் அரசு மற்றும் தேர் நிறுவலில் பங்காற்றிய இளைஞர்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க துவக்க விழாவிலும் ஆன்மீக மகிழ்விலும் பங்கேற்க, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் அனைத்து பக்தர்களையும் அன்புடன் அழைக்கிறது.