
புதுடில்லி, செப்டம்பர்-23,
நேற்று புதுடில்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் மோகன் லால், ஷாருக் கான், ராம்குமார், எம்.எஸ். பாஸ்கர், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தேசிய விருதினைத் தட்டி சென்று திரை உலகிற்கு மேலும் பெருமையைச் சேர்த்துள்ளனர்.
தமிழில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது ‘Parking’ படத்துக்காக சிறந்த கதை மற்றும் சிறந்த தமிழ் திரைப்படம் ஆகிய விருதுகளை பெற்றார்.
அதே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றதைத் தொடர்ந்து வலைத்தளவாசிகள் தேசிய விருது தகுதியான நடிகரிடம் சென்று சேர்ந்திருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து, வாத்தி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இது அவரின் இரண்டாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 71 வது தேசிய விருது விழாவில், பிரபல மலையாள திரைப்பட நடிகரும் இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீ மோகன் லாலுக்கு மிக உயரிய விருதான Dadasaheb Phalke விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவரின் பெயரை அறிவித்த போது அரங்கமே எழுந்து நின்று அவருக்கு கைத்தட்டி பாராட்டிய தருணம் அனைவரையுமே மெய் சிலிர்க்க வைத்தது.
இதனிடையே, முப்பது ஆண்டுகால திரைப் பயணத்தில் நடிகர் ஷாருக் கான் தனது முதல் தேசிய விருதை ஜவான் திரைப்படத்துக்காக பெற்றார். தொடர்ந்து அவரை வாழ்த்தி அவரது மகன் ஆரியன் மற்றும் மகள் சுஹானா இணைந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.