
உலு கிள்ளான், செப்டம்பர்-25,
சிலாங்கூர் உலு கிள்ளானில் 106 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளி, விரைவிலேயே புதிய 3 மாடி இணைக் கட்டடத்தைப் பெறவுள்ளது.
சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் அமையவுள்ள அப்புதியக் கட்டடம், 12 வகுப்பறைகள், ஒரு சுகாதார அறை மற்றும் ஒரு புத்தகக் கடையை உள்ளடக்கியிருக்கும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் அதனை அறிவித்தார்.
தற்போது, 250 மாணவர்களைக் கொண்டுள்ள அப்பள்ளியில், 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.
இதனால், அறிவியல் ஆய்வகமும், தகவல் தொழில்நுட்பமான ICT ஆய்வகமும் வகுப்பறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய கட்டடம், மாணவர்களின் STEM மற்றும் எழுத்தறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைவதாக சண்முகம் சொன்னார்.
இந்த முயற்சிக்கு The Community Chest, நிதியமைச்சு மற்றும் பல்வேறு நன்கொடையாளர்கள் நிதி பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
2018-டிலேயே தொடங்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக இது தாமதமானது.
எனினும், 2022-ல் அனுமதி கிடைத்த பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய இணைக் கட்டட நிர்மாணிப்பை சாத்தியமாக்கியதற்காக பிரதமர், சண்முகம் உள்ளிட்ட தரப்புகளுக்கு பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் Dr Ahaganapathy Dass நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
இந்தப் பள்ளி, ஒற்றுமை, கல்வி மற்றும் மலேசியா மடானி நோக்கங்களின் சின்னமாக தொடர்ந்து விளங்கி வரும் என்றார் அவர்.