
இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்-28,
கேலாங் பாத்தாவில் உள்ள இரண்டாவது ஜோகூர் பால நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில் போலீஸாருடன் தகராறு செய்ததால், 29 வயது சிங்கப்பூர் பெண் கைதுச் செய்யப்பட்டார்.
நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட exhaust பொருத்தப்பட்டிருந்ததால், அவரது சிங்கப்பூர் வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், போலீஸார் கேட்டபடி ஒத்துழைக்காமல், கடமையைச் செய்ய முயன்ற அதிகாரிகளை தடுத்ததோடு, அவர்களிடம் அநாகரீக வார்த்தைகளையும் அப்பெண் பயன்படுத்தியதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமராசன் தெரிவித்தார்.
பின்னர் மேற்கொண்ட சோதனையில், அப்பெண்ணுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கான பயண ஆவணங்கள் இல்லையென தெரியவந்தது.
‘அதிர்ஷ்டவசமாக’ போதைப்பொருள் மற்றும் மதுபான பரிசோதனையில் அவர் அவற்றை உள்கொள்ளவில்லை எனத் தெரியவந்தது.
இச்சம்பவத்தை அடுத்து குற்றவியல் சட்டம், சிறு சிறு குற்றங்களுக்கானச் சட்டம் மற்றும் குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
தவிர, _exhaust_கருவியை மாற்றியமைத்ததற்காக அவருக்கு சம்மனும் வழங்கப்பட்டது.