
சீனா, செப்டம்பர் -29,
மூன்று ஆண்டுகள் கட்டுமானப் பணிக்குப் பின், உலகின் உயரமான பாலம் சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குய்சோ மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.
இப்பாலம் திறந்ததன் மூலம், பள்ளத்தாக்கை கடந்துச் செல்லும் பயண நேரம் இரண்டு மணி நேரத்திலிருந்து வெறும் இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளது.
பள்ளத்தாக்கை கடந்துசெல்லும் இந்த பாலம், 625 மீட்டர் உயரத்தில் பீப்பான் நதியைத் தாண்டியுள்ளது என்றும் இது சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கோல்டன் கேட் பாலத்தைவிட ஒன்பது மடங்கு உயரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 2,890 மீட்டர் நீளமுள்ள இந்த ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் “பூமியின் பிளவு” என்று அழைக்கப்படும் பகுதியை இணைக்கும் வகையில், சீனாவின் விரைவாக வளரும் போக்குவரத்து உட்கட்டமைப்பில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
உயரமான மலையிடப் பகுதியில் இத்தகைய பாலத்தை நிர்மாணிப்பதில் பல சவால்கள் இருந்தபோதும், செயற்கைக்கோள் வழிச் செலுத்துதல், ட்ரோன், நவீன கண்காணிப்பு முறைமை, மிகுந்த வலிமை கொண்ட கட்டுமானப் பொருட்கள் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுமானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சீனாவின் குறைந்தளவு மேம்பாடு பெற்ற மாகாணங்களில் ஒன்றான குய்சோ, மலைப்பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் அதில், உலகின் மூன்று உயரமான பாலங்களும் அடங்கும் என்று அறியப்படுகின்றது.