
கெரிக், பேராக், அக்டோபர்- 1,
குவாலா காங்சார் கெரிக் பெங்காலான் ஹுலு சாலையின் 85.3 வது கிலோமீட்டர் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு டிரெய்லர்கள் மற்றும் ஒரு கார் மோதிய விபத்தில், ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கெரிக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றிய 42 வயது மதிக்கத்தக்க சார்ஜெண்ட் முகமட் ஃபாஹ்மி அர்ஸ்மி (Sarjan Mohd Fahmi Arzmi) என அடையாளம் காணப்பட்டார்.
டொயோட்டா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற போலீஸ் அதிகாரி, குவாலா காங்சாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, எதிர்புறம் வந்த டிரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து, மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற மற்றொரு டிரெய்லருடன் மோதியது என்று கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் சமட் ஒத்மான் (Superintendan Abdul Samad Othman) தெரிவித்தார்.
மேலும் அந்த டிரெய்லர் எதிர்வழியில் வந்து கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஓட்டிச் சென்ற காருடன் நேருக்கு நேர் மோதியத்தில் காவல் அதிகாரி கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிரெய்லர் ஓட்டுனர்களில் ஒருவருக்கு தலையில் காயமடைந்த நிலையில் தைப்பிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றும் மற்றொருவர் எந்தவொரு காயங்களுமின்றி உயிர் தப்பினார் என்று அறியப்படுகின்றது.
இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓட்டுநர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் மற்றும் வளைவு சாலைகளில் மிகுந்த கவனத்துடன் கனவுந்தை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.