
செர்டாங், அக்டோபர்-13 – அண்மையில் செர்டாங் UPM பல்கலைக்கழகத்தில் தெருநாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, விலங்கு நல ஆர்வலர்களும் அரசு சாரா இயக்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் அடுத்தத் கட்டமாக KPT எனப்படும் உயர் கல்வி அமைச்சிடம் இன்று அதிகாரப்பூர்வமாக புகாரளிக்கப்படுமென, Pelindung Khazanah Alam Malaysa அல்லது PEKA தலைவர் ராகேஷ் நாகராஜன் (Ragesh Nagarajan) தெரிவித்தார்.
5 நாட்களுக்குள் புகாருக்கு உரிய பதில் வராவிட்டால், அமைச்சின் கட்டடத்தின் முன் அமைதி மறியல் நடத்தப்படும்.
அதே சமயம், ஆள் வைத்து நாய்களை அழிப்பதற்கு UPM செலுத்தியக் கட்டணம் குறித்தும் சந்தேகம் எழுவதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடமும் புகார் அளிப்போம் என்றார் அவர்.
தெரு நாய்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் UPM நிர்வாகம் அணுகியிருக்க வேண்டுமென, அப்பல்கலைக் கழகத்தின் 13-ஆவது நுழைவாயில் முன்பு நேற்று நடைபெற்ற அமைதி மறியலின் போது ராகேஷ் சொன்னார்.
அதில், நாடு முழுவதுமிருந்து 20-க்கும் மேற்பட்ட விலங்கு நல ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
தெரு நாய்களை சுட்டுக் கொல்வதற்கு வெளியிலிருந்து ஒரு நிறுவனத்தை UPM அமர்த்தியிருப்பதாக முன்னதாக எழுந்த புகார்களை விசாரிக்க, அதன் நிர்வாகம் குழுவொன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.