தொழில்நுட்ப வளர்ச்சியோடு வர்த்தகத்தை மேம்படுத்துவீர்; அஜெண்டா சூர்யாவின் 23-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் கோபிந்த் சிங் பேச்

புக்கிட் ஜாலில், அக்டோபர்-13,
தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து நமது வர்த்தக முறைகளும் மேம்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.
குறிப்பாக குடும்ப மாதர்கள் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்க டிஜிட்டல் துறையில் ஈடுபட வேண்டும் எனவும், உலகளவில் AI வேகமாக முன்னேறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் தலைமையில் 2030-க்குள் மலேசியாவை ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற நாடாக உருவாக்க மடானி அரசாங்கம் பல பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்களை வழங்கி வருவதாவும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் மலேசியாவின் மிகப்பெரிய தீபாவளி விற்பனைப் பெருவிழாக்களில் ஒன்றான அஜெண்டா சூர்யா தீபாவளி கார்னிவல் நிகழ்வின் 23-வது ஆண்டு விழாவின் பிரமாண்ட தொடக்க விழாவில் கோபிந்த் அவ்வாறு பேசினார்.
2002-ஆம் ஆண்டு மறைந்த துன் சாமிவேலு தொடங்கி வைத்த இந்த தீபாவளி கார்னிவல், இன்று ஆண்டு தோறும் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை புரியும் நிகழ்வாக வளர்ந்துள்ளதாக, அஜெண்டா சூர்யாவின் தலைமை செயலதிகாரி ஜகாராவ் சிம்மான்கா பெருமிதம் தெரிவித்தார்.
இந்த 23-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, 15 சமூக ஊடக பிரபலங்களுக்கு கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக அளித்த பங்களிப்புக்காக நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அக்டோபர் 11 முதல் 19 வரை நடைபெறும் இந்த அஜெண்டா சூர்யா தீபாவளி பெருவிற்பனையில் மொத்தம் 350 கடைகள் உள்ளன;
மலேசியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை அது ஈர்த்து வருகிறது.