
கோலாலம்பூர், அக்டோபர்-23 – தேசிய முன்னணியிலிருந்து விலகுவது தொடர்பில் ம.இ.கா இன்னும் தீர்மானிக்கவில்லை.
அது தொடர்பான முடிவை பொதுப் பேரவை தான் முடிவுச் செய்யுமென, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
யாரும் கருத்துத் தெரிவிக்கலாம்; ஆனால் கட்சியின் எதிர்காலம் என வரும் போது, பொதுப் பேரவைக்கே முழு அதிகாரமுண்டு என்றார் அவர்.
சுமார் 80 ஆண்டு கால பந்தத்தை முறித்துக் கொண்டு அடுத்த மாதம் தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா வெளியேற முடிவெடுத்து விட்டதாக, அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனை மேற்கோள் காட்டி முன்னதாக வெளியான செய்திகள் குறித்து விக்னேஸ்வரன் கருத்துரைத்தார்.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது ம.இ.கா.வின் ‘அம்முடிவு’ குறித்து சரவணன் தம்மிடம் தெரிவித்ததாக, அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் முன்னதாக காணொளி வாயிலாக தெரிவித்திருந்தார்.
ம.இ.கா வெளியேறுவதற்கான காரணமாக பல்வேறு அதிருப்திகளை சரவணன் பகிர்ந்துகொண்டதாகவும் தாஜூடின் கூறியிருந்தது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விக்னேஸ்வரன் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
கூட்டணியிலிருந்து வெளியேற உறுப்புக் கட்சிகள் முடிவெடுத்தால், யாரையும் தடுக்க மாட்டோம் என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி முன்னதாகக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி தொடர்பான முடிவு நவம்பர் மாத ம.இ.கா பொதுப் பேரவையில் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் அம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



