
கோலாலம்பூர், அக்டோபர்-26,
சீனப் பள்ளி மண்டபங்களில் நடக்கும் வெளியாரின் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறுவதை தொடர்ந்து அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, ம.இ.காவின் பிரிகேட் பணிப்படை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் என்பது நல்ல ஒழுக்கம் மற்றும் மதிப்புகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்; அவ்வகையில், CSR என்ற பெயரில் கூட, மதுபானம், சிகரெட் அல்லது வேப் போன்ற தீயப் பழக்கங்களின் தாக்கத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என, அதன் தேசியத் தலைவர் ஆன்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
பள்ளிகள் ஒழுக்கம் மற்றும் குணநலனைக் கட்டியெழுப்பும் நிறுவனங்களாகும்; எனவே எந்த நேரத்திலும், எந்த நிகழ்விலும் மதுபானத்தை சாதாரணமாகக் கூட காட்சிப்படுத்துவது முறையல்ல. இது இளைஞர்களின் ஒழுக்க வளர்ச்சியை பாதிக்கும் என்று அண்ட்ரூ எச்சரித்தார்.
எனவே, கல்வி அமைச்சு தற்போதைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, அனைத்து பள்ளிகளும் மதுபானம், புகை, வேப் இல்லா மண்டலமாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என பிரிகேட் பணிப்படை கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.
‘Generasi Anti Jenayah’ அல்லது ‘குற்றத்தடுப்பு தலைமுறை’ பிரச்சார இயக்கத்தின் உணர்வுக்கு ஏற்ப, பள்ளி நிர்வாகம், பெற்றோர், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து இளைஞர்களை தீய பாதிப்புகளிலிருந்து காக்க வேண்டுமென அண்ட்ரூ அழைப்பு விடுத்தார்.
சீனப் பள்ளி மண்டபங்களில் மதுபானம் பரிமாறுதல் கூடாது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அச்சமூகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நடப்பு கொள்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பள்ளி நேரங்களுக்கு வெளியே மாணவர்களின் பங்கேற்பு இல்லாமல் சீனப் பள்ளி மண்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறப்படலாம் என்பதாகும்.



