
தங்காக், அக்டோபர்-26,
ஜோகூர், தங்காக்கில், மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் காதல் ஜோடியான 20 வயது Chang Ji Shiang மற்றும் 18 வயது Pang Chong Chong இருவரும் அண்மையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் இருவரின் குடும்பமும் பெருத்துயரில் மூழ்கினாலும், ‘இறப்புக்குப் பிறகும் அவர்களை இணைத்து’ வைக்க தீர்மானித்தனர்.
அதாவது சீன மரபு வழியில் மிங் ஹுன் (minghun) எனப்படும் ‘புதியத் திருமணத்தை’ நடத்த முடிவுச் செய்யப்பட்டது.
அவ்வழக்கப்படி, காதல் ஜோடியின் சவப்பெட்டிகள் அருகருகே வைக்கப்பட்டு, இருவரும் இணைந்திருப்பது போன்ற படம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
பிள்ளைகளின் பந்தம் ‘இறப்புக்குப் பிறகும்’ தொடரும் என்ற நம்பிக்கையில் பின்னர் இரு வீட்டாரும் எளிமையான சடங்கை நடத்தினர்.
மனித வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றென்பதை இச்சம்பவம் நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
அதே சமயம், உறவுகளின் இழப்பினால் ஏற்படும் வலியை எதிர்கொள்ளும் போது கலாச்சாரம் எவ்வாறு ஆறுதல் அளிக்கிறது என்பதையும் எடுத்துரைக்கிறது.



