Latestமலேசியா

நேரலையில் ஆசியான் தலைவர்களின் பெயர்கள் தவறாக அறிவிப்பு; மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட RTM

 

கோலாலம்பூர், அக்டோபர்-27,

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் நேரடி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட தொடர்ச்சியான தவறுகளால், மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையமான RTM அடுத்தடுத்து பல மன்னிப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தோனேசியாவின் தற்போதைய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவின் (Prabowo Subianto) பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் (Joko Widodo) பெயரை நேரலை வர்ணனையாளர் தவறாகக் குறிப்பிட்டதை RTM ஒப்புக்கொண்டது.

உடனடி உள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தின் பிரதமர்களையும் தவறாகப் பெயரிட்டதற்காக RTM மீண்டும் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

லோரன்ஸ் வோங்கிற்குப் (Lawrence Wong) பதிலாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) என்றும், தாய்லாந்தின் பிரதமர் அனுடின் சார்ன்விரகுலுக்குப் ( Anutin Charnvirakul) பதிலாக ஓராண்டுக்கு முன்னரே பதவி விலகிய ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) என்றும் தவறாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், எதிர்கால ஒளிபரப்புகளில் தகவல்களின் துல்லியத்தை உறுதிச் செய்வதற்கான உண்மைச் சரிபார்ப்பை வலுப்படுத்துவதாகவும் RTM உறுதியளித்தது.

இவ்வேளையில், இந்தோனேசிய அதிபரின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்ட சம்பவத்தை கடுமையாக கருதுவதாக, ISWAMI எனப்படும் மலேசிய இந்தோனேசிய செய்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வழங்கப்படும் ஒவ்வொரு தகவலும் துல்லியமாக இருப்பதை உறுதிச் செய்வதற்காக, அனைத்து செய்தியாசிரியர்களும் கடுமையான கட்டுப்பாடு மற்றும் உண்மைச் சரிபார்ப்பை தொடர்ந்து வலுப்படுத்துவார்கள் என ISWAMI நம்பிக்கை கொண்டுள்ளது.

இச்சம்பவம், குறிப்பாக அதிகாரப்பூர்வ அனைத்துலக நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட செய்தி சேகரிப்பில், ஊடகவியலாளர்கள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு நினைவூட்டியது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அனைத்து 11 ஆசியான் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!