
கோலாலாம்பூர், அக்டோபர்-28,
“கண்முன்னே கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவுவதே என் பாணி,” என்கிறார், சமீபத்தில் டிக் டோக்கில் வைரலான Mohamad Ezzuan Hariff Agus Shariff என்பவர்.
சிரம்பானிலிருந்து வந்து, தலைநகரில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறிய ஓர் இந்திய இளைஞனின் பசியைப் போக்கி, அவனை TBS பேருந்து நிலையத்திற்கு Ezzuan பாதுகாப்பாக அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த இளைஞன் தான் ஒரு OKU நபர் என்றும், தன்னிடத்தில் OKU அட்டையும் இருப்பதாகவும் அந்த காணொளியில் கூறியிருப்பதையும் காண முடிகிறது.
அதிலும், நன்றி தெரிவிக்க அவ்விளைஞன் Ezzuan-னின் காலில் விழுந்த காட்சி பலரின் இதயத்தையும் தொட்டது; ஆனால் வழக்கம்போல சிலர் எதிர்மறையான கருத்துகளையும் பதிவிட்டனர்.
அதற்கு புதிய வீடியோ வாயிலாக பதிலளித்த Ezzuan, “காசோ பணமோ, சாப்பிட உணவோ என அவன் எதனையும் கேட்கவில்லை; வெறும் TBS வரை அனுப்பி வையுங்கள் என்று மட்டுமே கேட்டான்” என்றார்.
“அவன் உண்மையாக கஷ்டத்தில் இருந்தான். நான் வற்புறுத்தியே அவனை சாப்பிட வைத்தேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறிய Ezzuan, “ஒருவேளை அவன் பொய் சொன்னாலும் அது அவனுக்கும் கடவுளுக்கும் இடையிலானது — எனக்கு இழப்பொன்றும் இல்லை” எனக் கூறினார்.
அன்பும் மனிதநேயமும் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவூட்டும் இந்தக் கதை, பலரின் மனதை வருடியுள்ளது.



