DGP மாதிரி: அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள DGP எனப்படும் ‘முன்னேற்றகரமான ஊதியக் கொள்கை’

கோலாலம்பூர், அக்டோபர்-30,
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள DGP எனப்படும் ‘முன்னேற்றகரமான ஊதியக் கொள்கை’ குறித்து இதோ உங்களுக்கான சில தகவல்கள்…
முன்னேற்றகரமான ஊதியக் கொள்கை என்றால் என்ன?
இது தொழிலாளர்களின் சம்பளத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான கொள்கையாகும் – அதாவது திறமையும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் போது சம்பளமும் உயரும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் 2025 ஜனவரி முதல் அதன் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் செய்யலாம்.
யாரெல்லாம் தகுதிப் பெறுகிறார்கள்?
இத்திட்டம் தனியார் துறை ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதம் RM1,500 முதல் RM4,999 வரை சம்பளம் பெறும் entry-level மற்றும் non-entry-level பணியாளர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
எந்தெந்த துறைகளுக்குக் கிடைக்கும்?
பொதுச் சேவை, சமூக பாதுகாப்புத் துறை, வீட்டு வேலை வழங்குநர்கள், மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளும் இதில் பங்கேற்கலாம்.
DGP கொள்கையின் நோக்கம் என்ன?
இந்த கொள்கையின் முக்கிய நோக்கமே நாட்டின் சம்பள அமைப்பை மறுசீரமைத்து, சம்பள உயர்வை முறையாகச் செய்து, போட்டித்திறனையும் திறமையையும் உயர்த்துவது ஆகும்.
DGP-யின் அடிப்படை என்ன?
அடிப்படையில் இது ஒரு சுய விருப்பத் திட்டமாகும்; நிறுவனங்கள் gajiprogresif.gov.my வழியாக பதிவுச் செய்யலாம்.
திறமையும் உற்பத்தியும் முன்னேற்றம் காணும் போது சம்பளத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தி ஆற்றல் தொடர்பான நிபந்தனையைப் பூர்த்திச் செய்யும் நிறுவனங்களுக்கு ரொக்க ஊக்கத் தொகை வழங்கப்படும்.
ஆக, தொழிலாளர்களும் முதலாளிமார்களும் இதனால் பெறும் நன்மைகள் என்னென்ன?
அரசாங்கம் இதற்காக RM200 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 50,000 பணியாளர்கள் இதன் பலனை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Entry-level பணியாளர்கள் குறைந்தபட்ச அரசு வழிகாட்டுதலின்படி சம்பளத்தைப் பெற வேண்டும்; அதே சமயம் non-entry-level பணியாளர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 6% சம்பள உயர்வு உறுதிச் செய்யப்படும்.
தகுதிப் பெற்ற முதலாளிமார்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதுவரை 2,852 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன; அவற்றில் 1,966 நிறுவனங்கள் ஏற்கனவே 20,737 பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளன. அவை பெரும்பாலும் PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும்.
இது தொழிலாளர்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், நிறுவனங்களுக்கு திறமையான மனிதவளத்தையும் உருவாக்கும் ஒரு முன்னேற்றமான கொள்கை…



