
கோலாலம்பூர், நவம்பர்-1,
இஸ்ரேலியக் கொடியைக் கொண்ட சேலையை அணிந்திருப்பது போல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் படத்தை எடிட் செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றிய RHB வங்கியாளர், தற்போது அந்நிறுவனத்தில் வேலையில் இல்லை.
உள் விசாரணையின் முடிவில் நேற்றிலிருந்து அப்பெண் தங்களுடன் வேலை செய்யவில்லை என, ஒரு சுருக்கமான அறிக்கை வாயிலாக RHB உறுதிப்படுத்தியது.
“நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளை மீறும் எந்தவொரு செயலையும் அறவே சகித்துக் கொள்ள மாட்டோம்” என அவ்வறிக்கைக் கூறியது.
என்றாலும் அப்பெண் வேலையிலிருந்து நீக்கப்பட்டாரா அல்லது அவராகவே ராஜினாமா செய்தாரா என்பதை RHB குறிப்பிடவில்லை.
முன்னதாக, அவ்விஷயம் வைரலாகி RHB மீது கண்டனங்கள் பாய்ந்த நிலையில், நடத்தை விதிகளை மீறியிருந்தால் அந்த ஊழியர் மீது நிச்சயமாக கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவ்வங்கி உறுதியளித்தது.
அதோடு ஊழியரின் செயல் அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய, எந்த விதத்திலும் நிறுவனத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் அது தெளிவுப்படுத்தியிருந்தது.
இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்புக்கு அண்மையில் சிவப்புப் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதன் விமர்சிக்கும் வகையில், அநாகரீகமாக பிரதமரின் படம் எடிட் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் மற்றும் MCMC-யிலும் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.



