
கோலாலம்பூர், நவம்பர்-1,
மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியா, நீரிழிவு நோயால் முட்டிக்குக் கீழ் இடது காலை இழந்திருந்தாலும், அவரின் கலைத்தாகம் தொடருகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்த உள்ளூர் திரைப்படமான ‘இறுதி ஸ்ட்ரைக்’ நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அது குறித்து பெரும் மகிழ்ச்சித் தெரிவித்த 61 வயது சத்தியா எனும் சத்தியா பெரியசாமி, இப்படம் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றென வருணித்தார்.
“கடந்தாண்டு 2 கால்களும் இருந்தபோது படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்; எனவே இப்படத்தில் ‘பழைய’ சத்தியாவை இரசிகர்கள் பார்க்கலாம்” என்றார் அவர்.
40 ஆண்டுகால கலைத்துறை வாழ்க்கையில், நகைச்சுவை நடிகராக அல்லாமல் ‘ஹீரோ’வாக இவர் திரையில் தோன்றுவதும் இதுவே முதல் முறை.
‘ஹீரோ’ கதாபாத்திரம் என்பதால் முதலில் வாய்ப்பை ஏற்கத் தயங்கியதாகவும், எனினும் இயக்குநர் T. தனேஷ் குமார் தம்மை ஊக்கப்படுத்தி நம்பிக்கை கொடுத்ததாகவும் சத்தியா சொன்னார்.
பல்லின கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ளதால், ‘இறுதி ஸ்ட்ரைக்’ உண்மையில் ‘ஒரே மலேசியா’ படம் எனக் கூறிய சத்தியா, இரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று அதனைக் காண வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
‘coach’ செண்பகமாறன் என்ற முன்னாள் கால்பந்து வீரர், ஓர் இளம் அணியை உருவாக்குவதில் சந்திக்கும் சவால்களைச் சித்தரிக்கும் இந்த இருமொழி படத்தில், சரேஷ் D7, இர்ஃபான் சாய்னி, ரவின்ராவ் சந்திரன், அல்வின் மார்டின், கோமாளா நாயுடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.



