
புத்ராஜெயா, நவம்பர்-2,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதுகு வலியால் அவதிப்படுவதால், பஹாங் மாநிலத்துக்கான இன்றைய பணி நிமித்தப் பயணத்தை அவர் இரத்துச் செய்துள்ளார்.
முதுகு வலியால் அவரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மருத்துவக் குழுவினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் கடைசி நேரத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
அவருக்குப் போதிய ஓய்வுத் தேவையென, பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
எனவே, தன்னை வரவேற்க முழுத் தயார் நிலையோடு காத்திருந்த பஹாங் மாநில மக்களிடம் அன்வார் மன்னிப்புப் கோரினார்.
பஹாங்கில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
78 வயது அன்வார், கடந்த ஒரு வாரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான மாநாடுகளிலும், பிறகு தென் கொரியாவில் நடைபெற்ற APEC மாநாட்டிலும் அடுத்தடுத்து ஓய்வின்றி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



