மன்னிப்பு கேட்பதற்கு குழந்தையை பயன்படுத்துவதா? WWC போட்டி ஏற்பாட்டாளர்களை சாடினார் ஹன்னா யோ

கோலாலம்பூர், நவ 4 –
WWC எனப்படும் Warzone World championship போட்டியை ஏற்பாடு செய்ததற்காக மன்னிப்பு கேட்க ஒரு குழந்தையைப் பயன்படுத்தியதற்காக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ ஏற்பாட்டாளர்களை சாடினார்.
இப்போட்டியை நடத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறாததால், WWC ஏற்பாட்டாளர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று குழந்தையின் இன்ஸ்டாகிராமின் கருத்துகள் பிரிவில் ஹன்னா எழுதியுள்ளார்.
தயவுசெய்து இதுபோன்ற விளக்கங்களைச் சொல்ல குழந்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சிடம் அப்பாவியான சிறு குழந்தை மன்னிப்பு கேட்க தேவையில்லை. இதற்கு முழுக்க முழுக்க ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஹன்னா யோ கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, அண்மைய WWC பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தோனேசிய போட்டியாளரை உதைத்த சம்பவத்திற்கு குழந்தை மன்னிப்பு கேட்பதைக் காட்டும் ஒரு வீடியோ alfateh_semboyanwarrior என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டதை ஹன்னா யோ
குறைகூறினார்.
WWC போட்டிக்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சிடம் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெறவில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹன்னா யோ விளக்கியிருந்தார்.
அனைத்துலக பங்கேற்பை உள்ளடக்கிய எந்தவொரு விளையாட்டு நிகழ்வும் 1997 ஆம் ஆண்டின் விளையாட்டு மேம்பாட்டுச் சட்டம் (சட்டம் 576) இன் படி மலேசியாவின் விளையாட்டு ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.



