BWF உலகத் தொடர்; முதலிடத்திற்கு முன்னேறிய பெர்லி – தீனா

கோலாலம்பூர், நவம்பர் 7- உலகப் பூப்பந்து சம்மேளனமான BWF-ஃபின் உலகத் தொடர் தர வரிசையில், நாட்டின் மகளிர் இரட்டையரான பெர்லி தான் – எம். தீனா இணை முதலிடத்திற்கு முன்னேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதுவும் உலகின் முதல் நிலை ஜோடியான சீனாவின் Liu Sheng Shu – Tan Ning-ங்கை அவர்கள் பின்னுக்குத் தள்ளினர்.
இவ்வாண்டு இதுவரை நடந்த உலகத் தொடர் போட்டிகளில் பெர்லி – தீனா இருவரும் 104,860 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
சீன ஜோடி, அண்மைய பிரான்ஸ் பொதுப் பூப்பந்து மற்றும் ஹைலோ (Hylo) பொதுப் பூப்பந்துப் போட்டிகளில் பங்கேற்காததால், 103,150 புள்ளிகளோடு இரண்டாமிடத்திற்கு இறங்கியது.
இந்த BWF உலகத் தொடர் தர வரிசை, டிசம்பர் 17 முதல் 21 வரை சீனா Hangzhou நகரில் நடைபெறும் WTF உலகத் தொடர் இறுதிச் சுற்றில் பங்கேற்க முதல் 8 இரட்டையரைத் தேர்வுச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் உலகத் தர வரிசை என வரும் போது சீன ஜோடியே இன்னும் முதல் நிலையிலும் மலேசிய ஜோடி இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றன.
என்றாலும், வரும் செவ்வாய்க்கிழமை ஜப்பானில் தொடங்கும் Kumamoto Masters போட்டிக்கு முன்பாக பெர்லி-தீனா இருவருக்கும் இது புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



