
ஜகார்த்தா, நவம்பர் 8 – இந்தோனேசியாவின் தலைநகரிலுள்ள பள்ளி வளாக மசூதியில், ஜும்மா தொழுகையின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அக்கூட்டத்திலிருந்த 17 வயது மதிக்கத்தக்க இளைஞன் முக்கிய சந்தேக நபராக இருக்கலாமென போலீசார் சந்தேகித்துள்ளனர்.
அச்சம்பவத்தில் 55 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு சிலர் கடுமையான எரிபுண் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்குண்டு வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சிலரால் சுவாசிக்க முடியவில்லை என்றும் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்ததால் மக்கள் பீதியுடன் ஓடினர் என்றும் கூறப்பட்டது.
அந்த 17 வயது சந்தேக நபர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளதைத் தொடர்ந்து வெடிப்பின் உண்மையான காரணம் மற்றும் நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தெரிவித்தார்.



