
ஃபீனிக்ஸ், நவம்பர்-8 – அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான Grand Canyon West இராட்சத பள்ளத்தாக்கில் மீண்டுமொரு சோக விபத்து நடந்துள்ளது.
நேற்று Guano Point பகுதியில், 65 வயது ஆடவர் பாறைகளின் விளிம்பில் தவறி வழுக்கி 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவருடைய சிதைந்த உடல் சுமார் 130 அடி ஆழத்தில் பாறைகளின் மேல் மீட்கப்பட்டது.
இறந்தவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த Grand Canyon பள்ளத்தாக்கு, மில்லியன் கணக்கான ஆண்டுகால புவியியல் வரலாற்றை வெளிப்படுத்தும் அடுக்கு சிவப்பு பாறை அமைப்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.
தற்போது தேசியப் பூங்காவாகவும் உள்ள இப்பள்ளத்தாக்கு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாகும்.
அடுக்குப் பாறைகளின் உச்சியிலிருந்து பள்ளத்தாக்கின் இரம்மியமான காட்சிகளைக் கண்டு களிப்பதோடு, மலையேறும் நடவடிக்கைகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதியுண்டு.
ஆனால், அவ்வப்போது இதுபோன்று யாராவது விழுந்து உயிரிழப்பதால், அங்கு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது.



