
ஷா அலாம் , நவ-10,
கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும், WCE எனப்படும் மேற்கு கடற்கரை விரைவுச் சாலையின் நிறுத்தப்பட்ட ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்காக இடத்தை காலி செய்ய அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு வார நீட்டிப்பு குறித்தும் இனி பேச்சுவார்த்தை இருக்காது என்று சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார்.
நடுவர்கள் தங்கள் இழப்பீட்டை மதிப்பிடுவது உட்பட, இந்த விவகாரத்தில் அனைத்து செயல்முறைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்று அமிருடின் சுட்டிக்காட்டினார். இந்த பிரச்னை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இழப்பீட்டை மேம்பாட்டாளர் தீர்மானிக்கவில்லை . மாறாக நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது, அவர்கள் நியாயமாக செயல்பட்டதாக தாம் நினைப்பதாகவும் எனவே அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் இந்த விவகாரத்திற்கு பொறுப்புணர்வோடு
தீர்வு காணவேண்டும். தன்னால் முடிந்தவரை மாநில அரசாங்கம் தனது சிறந்த உதவியை வழங்கும். WCE நிறுவனத்தை பொறுத்தவரை பொருளாதார ரீதியில் கூடுதல் மதிப்பை கொண்டுள்ளது என இன்று கோலா சிலாங்கூரில் அவர் கூறினார். அதோடு நிலத்தை காலி செய்யும்படி குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் போதுமானதாக உள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார்.



