
செர்டாங், நவம்பர் 11 – மலேசியாவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு போலியான பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் ஆவணங்களை விற்பனை செய்த குற்றத்தில் 3 வியட்நாமிய பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செர்டாங் ஸ்ரீ கெம்பங்கான் பகுதியில் அமைந்திருக்கும் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” எனப்படும் அதிரடி நடவடிக்கையில் கைதானவர்களில் நால்வர் உள்ளூர்வாசிகள் என்று அறியப்படுகின்றது.
இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர்களை குறி வைத்து இத்தகைய போலி ஆவணங்களை தயாரிக்கும் குற்றவாளிகள் ஆள் ஒன்றுக்கு தலா 2,500 முதல் 3,000 ரிங்கிட் வரை கட்டணத்தை வசூலித்து வந்ததாக குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜக்கரியா ஷாபான் (Zakaria Shaaban) கூறியுள்ளார்.
ஜோகூர் லர்க்கின் (Larkin) பேருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் TBS பேருந்து நிலையம் வரை பயணம் செய்து வந்த இரண்டு உள்ளூர் சந்தேக நபர்களைப் பற்றிய தகவல் போலீசாருக்கு சிக்கியது. போலீசார் அவர்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து, ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள வீடொன்றில் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.



