
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 15 – கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிரம்பான் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைபெற்று வந்த 14 வீட்டுக்கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு சீன நாட்டு பிரஜை உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று தாமான் ஸ்ரீ கார்கோசாவிலுள்ள (Taman Sri Carcosa) வீடொன்றில் 35,000 ரிங்கிட் மதிப்பிலான ஆபரணங்களும் பிராண்டெட் கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து போலீசார் சிரம்பான் 2வில் அந்த சீன ஆடவனைக் கைது செய்தனர்.
அந்த ஆடவனைக் கைது செய்யும்பொழுது அவன் வாகனத்திலிருந்த இரும்பு வெட்டிகள், ஸ்க்ரூ டிரைவர்கள் போன்ற கொள்ளைச் செயல்களில் பயன்படுத்தியதாக நம்பப்படும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, நவம்பர் 10 அன்று கோலாலம்பூர், லெபூ புடூவில் உள்ள வீடோன்றில் 60 வயதுடைய உள்ளூர் நபரையும், 64 வயதுடைய சீனப் பெண்ணையும் கைது செய்தனர்.
அந்த இல்லத்திலிருந்து 27 பிராண்டெட் கைக்கடிகாரங்கள், ஒன்பது ஆபரணங்கள், மூன்று வங்கி அட்டைகள், ஐந்து பிராண்டெட் பைகள், ஒரு லேப்டாப், 18,000 ரிங்கிட் பணம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கைது நடவடிக்கைகளின் மூலம் சிரம்பான் மாவட்டத்தில் நடைபெற்ற ஏழு கொள்ளை வழக்குகளும், சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த ஏழு வழக்குகளும் தீர்க்கப்பட்டுள்ளன என்று நெகிரி செம்பிலான் காவல் துறை தலைவர் அல்சாஃப்னி அகமட் (Alzafny Ahmad) கூறினார்.
அம்மூவரும் விசாரணைக்காக நவம்பர் 15 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



