
ஷா ஆலாம், நவம்பர்-16 – சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் மூத்த உதவியாளர் ஒருவரது ‘திடீர்’ சொத்துக் குவிப்பு, அவரது நெருங்கிய வட்டாரங்களின் புருவத்தையே உயர்த்தியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாய் உருவாக்கப்பட்ட ஒரு வாட்சப் குழுவில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அந்த உதவியாளர் எவ்வாறு RM3 மில்லியன் மதிப்புள்ள பங்களா வீட்டை வாங்கினார், 5 நட்சத்திர வெளிநாட்டு ஹோட்டல்களில் எப்படி பிரமாண்ட விடுமுறையைக் கழித்தார் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அந்த வாட்சப் குழுவுக்கு ‘MB Salangor’ என பெயர் வைக்கப்பட்டு, Madani என அழைத்துக் கொள்ளும் நபர் அதனை நிர்வகிக்கிறார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களோடு, சில எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த உதவியாளர், வழக்கத்திற்கு மாறாக மாநில அரசின் பல நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகிப்பதாகவும் கூறப்படுவதால், அவரது உண்மையான வருமானம், பொறுப்புகள் மற்றும் conflict of interest எனப்படும் நலன் முரண்பாடு உள்ளதா என்பதை அமிருடின் விளக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தவிர, குற்றச்சாட்டுகளைச் சரிபார்ப்பதற்காக போலீஸ் அல்லது MACC விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அந்த வாட்சப் குழுவில் வலியுறுத்தியுள்ளனர்.
பிரச்னையின் தீவிரம் கருதி, வெளிப்பட்ட தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிச் செய்ய மந்திரி பெசாரின் அலுவலகம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.



