
ஷா அலாம், நவ 16 – ம.இ.காவின் 79 ஆவது பேராளர் மாநாட்டில் தேசியத் தலைவரின் கொள்கை உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ம.இ.கா பேராளர்கள் பெரும்பாலுர் தேசிய முன்னணியிடம் போதிய மரியாதை கிடைக்காதால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிக்காத்தான நேசனலில் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் நலன், எதிர்காலம் ,
அடுத்த தலைமுறை குறிப்பாக இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அடுத்து எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்பதை முடிவு செய்யும் பொறுப்பை ம.இகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மத்திய செயலவை முடிவு செய்யும் என முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ம.இ.கா மரியாதைக்குரிய ஒரு கட்சியாக தொடர்ந்து இருப்பதற்கு நாம் பெரிக்காத்தான் நேசனலில் இணைய வேண்டுமா என்பது விரிவாக ஆராய்ந்த பின் முடிவு செய்யப்படும் என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
ம.இ.காவுக்கு முறையான மதிப்பும் மரியாதையும் தேவை என்பதால் இனியும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியில் நீடிக்காமல் மலேசிய இந்தியர்களின் எதிர்கால அரசியல் நலன்கள் மற்றும் உரிமைகளை கருத்திற்கொண்டு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைய வேண்டும் என விவாதத்தில் கலந்து கொண்ட அனைத்து பேராளர்களுமே ஆதரவு தெரிவித்தனர்.
விவாதத்தில் கலந்துகொண்ட சிலாங்கூர், பேரா, கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், மலாக்கா , கெடா, ஜோகூர் உட்பட அனைத்து மாநில பேராளர்கள் மட்டுமின்றி புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் பேராளர்களும் பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக
தெரிவித்தனர். அதே வேளையில் இந்த விவகாரத்தில் ம.இ.கா தேசிய தலைமைத்துவம் மற்றும் ம.இ.கா மத்திய செயலவை எடுக்கும் முடிவுக்கும் முழு ஆதரவை வழங்குவதாகவும் பேராளர்கள் தெரிவித்தனர்.



