Latestமலேசியா

இந்திரா காந்தி வீதிவழி போராட்டம்! மஇகாமீது வஞ்சனை புரிந்த குலசேகரன் ஒரு வாய்ச்சொல் வீரர்!

கோலாலாம்பூர், நவம்பர்-18 – மேனாள் பாலர் பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தியின் பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திலும் அவரின் மேனாள் கணவரே கடைசி மகளை கடத்திய வகையிலும் மஇகாவை முடிந்த அளவிற்கு திட்டித் தீர்த்து இப்பொழுது சட்டத்துறை துணை அமைச்சராக இருக்கும் மு. குலசேகரன், தற்பொழுது இந்திரா விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ம இ கா தேசிய ஊடகச் செயலர் சிவசுப்பிரமணியம் வினாத் தொடுத்துள்ளார்.

கடைசியில் இந்திரா காந்தியை வீதிவழி போராட்டத்தில் தள்ளியதுதான் மிச்சம்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பொழுது இந்திராகாந்தியின் பாதுகாவலர், வழிகாட்டி எல்லாமே தான்தான் என்பதைப்போல தொடைதட்டிய குலசேகரன், மனிதவளத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை; பேசவும் இல்லை.

இப்பொழுது சட்டத்துறை துறை துணை அமைச்சராக இருக்கின்ற நிலையில்கூட மகளை இழந்து 17 ஆண்டுகளாக பரிதவிக்கின்ற அந்தத் தாய்க்கு எதுவும் செய்யாமல் பதவிசுகம் ஒன்று போதும் என்று அமைதி காத்து வருகிறார்.

சுதந்திர மலேசியாவில் எதிரணியில் அமர்ந்து கூப்பாடு போட்டே பழகிவிட்ட குலசேகரன் போன்றோருக்கு எதிர்க்கட்சி மனநிலையும் மரபணுவும் மாறவே இல்லை.

குலசேகரன் போன்றோருக்கு குறை சொல்லவும் மஇகாவை வசைபாடவும்தான் தெரியுமே தவிர எதையும் சாதிக்கவோ நடைமுறைப்படுத்தவோத் தெரியாது.

இந்திரா காந்தியின் கடைசி மகள் ஒரு தலைப் பட்சமாக மதம் மாற்றப்பட்டது செல்லாது என்றும் அந்த மகளை இந்திராவின் முன்னாள் கணவரிடமிருந்து மீட்டு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவல்துறையால் அவரை கண்டுபிடிக்கவும் முடியவில்லை; மகளை மீட்கவும் முடியவில்லை.

மடானி ஒற்றுமை அரசாங்கம் வழக்குகின்ற சாரா உதவித்தொகை பெட்ரோல் டீசல் உதவி சலுகையை எல்லாம் அனுபவித்துக் கொண்டு உள்நாட்டில் தான் இருப்பதாகக் கருதப்படும் அந்த முன்னாள் கணவரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இது பற்றி எல்லாம் மிக முக்கியமான அமைச்சகத்தில் இருக்கின்ற குலசேகரன் எதுவுமே பேசுவதில்லை.

அவருக்கு மிகவும் நெருக்கமான உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து காவல்துறை மூலம் இந்திரா காந்தியின் மேநாள் கணவரே கண்டுபிடிக்கவும் மகளை மீட்டு வரவும் கோரிக்கை வைத்ததாகவும் தெரியவில்லை.

மொத்தத்தில், எதிரணியில் இருந்தபொழுது மஇகாமீது பழிசொல்லத் தெரிந்த குலசேகரனுக்கு, ஆளும் தரப்பில் அமைச்சரவையில் அதுவும் பொறுப்பான சட்டத்துறையில் இருந்து கொண்டும் இந்திரா காந்திக்கு எதுவுமே செய்யாமல் கைவிட்டதால் இப்பொழுது அந்த தனித்தாய் வீதி வழிப் போராட்டத்தில் இறங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய சமுதாயம் இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும்; இந்த வாய்ச்சொல் வீரர்களுக்கு வஞ்சனைபுரிய மட்டுமே தெரியும் என்பதை.

காலமும் மாறும் காட்சியும் மாறும் இந்திரா காந்திக்கு விடிவும் பிறக்கும் என்று மஇகா செயலப்பை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!