
கோத்தா பாரு, நவம்பர் 19-அரசாங்க ஊழியர்களின் ஓய்வுப் பெறும் வயதை 65-தாக உயர்த்த முன்வைக்கப்பட்ட பரிந்துரை, பங்குத்தாரர்களின் ஆலோசனையில் உள்ளதாக பொதுச் சேவைத் துறையான JPA கூறியுள்ளது.
ஓய்வுப் பெறும் வயதை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்படுமென 13-ஆவது மலேசிசியத் திட்டத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில், இதுவரை கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்க காங்கிரஸ், மற்றும் பணி ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்துடன் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாக, JPA தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ Wan Ahmad Dahlan Abdul Aziz தெரிவித்தார்.
இதுவோர் அசாதாரணமான நடவடிக்கை என்பதால், மிக மிக கவனமாக ஆலோசித்து, அனைத்துத் தரப்புக்கும் நன்மையைக் கொண்டு வரும் முடிவை எடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
மலேசியா வயோதிக நாடாக மாறி வருவதால், அரசு ஊழியர்களின் கட்டாயப் பணி ஓய்வுப் பெறும் வயது மறுஆய்வு செய்யப்படும் என, ஜூலையில் 13-ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
இறுதி முடிவெடுக்கும் முன், நிதி தாக்கங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அந்த மறுஆய்வு கருத்தில் கொள்ளும் என அவர் சொன்னார்.
தற்போது, தனியார் துறை ஊழியர்கள் போலவே, அரசு ஊழியர்களின் கட்டாயப் பணி ஓய்வுப் பெறும் வயது 60-தாகும்.



