
கோலாலம்பூர், நவம்பர் 19-ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, சீனாவின் இராட்சத புதிய பாண்டா கரடி ஜோடி மலேசியா வந்துசேர்ந்துள்ளது.
இதில் Chen Xing என்பது ஆண் கரடியாகும். Xiao Yue பெண் கரடியாகும்.
இரண்டுமே நேற்றிரவு 8.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் KLIA வந்திறங்கின.
அந்த பாலூட்டி ஜோடி, தேசிய மிருகக்காட்சி சாலையில் மேம்படுத்தப்பட்டுள்ள ‘இராட்சத பாண்டா கரடிகள் பாதுகாப்பு மையத்திற்கு’ கொண்டுச் செல்லப்படுகின்றது.
அவற்றின் பாதுகாப்பு, வசதி மற்றும் சாதகமான வாழ்விட சூழலுக்கு அது அவசியம் என, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு கூறியது.
Zoo Negara-வில் விலங்கு மருத்துவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பராமரிப்பாளர்களின் முழு கண்காணிப்பின் கீழ், Chen Xing, Xiao Yue பாண்டா கரடிகள் ஒரு மாத கால கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளும்.
அதன் பிறகே பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என அமைச்சு கூறியது.
இப்புதிய பாண்டா கரடிகளின் வருகை மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால உறவை பறைசாற்றுவதாகவும் அது கூறிற்று.
ஏப்ரலில் சீன அதிபர் சீ சின் பிங் மலேசியா வந்தபோது கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தின் கீழ், மேலும் இளமையான 1 பாண்டா கரடி ஜோடியை, இவ்வாண்டு தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மலேசியா பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதே போன்றதொரு ஒப்பந்தத்தில், Fu Wa மற்றும் Feng Yi இராட்சத பாண்டா கரடி ஜோடி 2012-ல் பெற்ற மலேசியா கடந்த மே 18-ஆம் தேதி அவற்றைத் தாயகம் திருப்பியனுப்பியது.



