
சபரிமலை, நவம்பர் 19-கேரளாவின் சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நிரம்பி வழியும் கூட்டத்தில் சிக்கி, பெண் பக்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்து 58 வயது அம்மாது உயிரிழந்தார்.
இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு சுமார் 6 மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருப்பது வழக்கம்
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாள்தோறும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இருந்தபோதிலும் இவ்வாண்டு கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலை நிரம்பி வழிகிறது.
குறிப்பாக வெறும் 48 மணி நேரங்களில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்ததால், திருவாங்கூர் தேவஸ்தானமே ஆடிபோனது.
இதனால் 10 முதல் 15 மணி நேரம் வரை பக்தர்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புனித 18 படிகளுக்கு அருகில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நின்றதால் யாத்திரை பாதை மிகுந்த நெரிசலாக இருந்தது.
பெற்றோரின் தோள்களில் அமர்ந்திருந்த சிறு குழந்தைகள், கூட்டம் முண்டியடித்ததால் அழுவதை காண முடிந்தது.
போலீஸார் குவிக்கப்பட்டிருந்தாலும் பக்தர்கள் பலர் தடுப்புகளை ஏறி குதித்து கடந்தனர்.
இப்படி மணிக்கணக்கில் நிற்கும் தங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை; கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் படு மோசமாக இருப்பதாக பக்கர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.
சிலர், கூட்ட நெரிசல் காரணமாக ஐயப்பனை தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், சபரிமலை செல்லும் மலேசிய ஐயப்ப பக்தர்களும் இது போல பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமலிருக்க பயணத்தை முறையாகத் திட்டமிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



