
கேமரன் மலை , நவ 20 – கடந்த சில ஆண்டுகளாக கேமரன் மலையில் வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த பல வணிக வளாகங்கள் மற்றும் காய்கறித் தோட்டங்களில் இன்று மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வர்த்தக கட்டிடங்கள், கட்டுமான பகுதிகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சேகரிக்கும் மையங்கள் என நான்கு பிரதான மண்டலத்தை இலக்காகக் கொண்டு Ops Gempur
சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்கரியா ஷாபன் ( Zakaria Shaaban ) தெரிவித்தார்.
தங்களது வருமானத்தை பாதிக்கும் வகையில் கேமரன் மலையில் வெளிநாட்டினர் குவிந்திருப்பது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக உள்நாட்டு மக்களிடமிருந்து புகார் கிடைத்தத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
1,886 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டதில் ஆவணங்களை கொண்டிருக்காதது, அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை விட நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தது உட்பட குடிநுழைவு குற்றங்களுக்காக 468 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் அதிக அளவில் 175 மியன்மார் பிரஜைளும் , 174 வங்காளதேசிகளும் அடங்குவர்.
மேலும் 67 இந்தோனேசியர்கள், நேப்பாளத்தைச் சேர்ந்த 20 பேர் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.



