
கோலாலம்பூர், நவம்பர்-21 – இவ்வாண்டு இரயில் தண்டவாளங்களில் நிகழ்ந்த கேபிள் கம்பி திருட்டுகளால், நாடு முழுவதும் இரயில் சேவையில் 1,300 மணி நேரங்களுக்கும் மேல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்து, போகும் இடங்களுக்கு நேரம் தவறியுள்ளனர்.
திருடப்படும் கம்பிகள் பெரும்பாலும் பழைய இரும்பு சாமான்களாக விற்கப்படுகின்றன.
ஆனால் அதன் விளைவுகள் மிகப் பெரியவை என போக்குவரத்து அமைச்சு கவலைத் தெரிவித்தது.
சமிக்ஞை முறை சேதமடைதல், கோடிக்கணக்கான ரிங்கிட் பழுதுபார்ப்புச் செலவுகள், பாதுகாப்பு ஆபத்துகள் என அவற்றை அது பட்டியலிடுகிறது.
இந்நிலையில் போலீஸாரும் இரயில்வே அதிகாரிகளும் இணைந்து கேபிள் திருட்டுக்கு எதிரான கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
தவிர, CCTV, ட்ரோன் கேமரா கண்காணிப்புகள், கடுமையான தண்டனைகள் போன்றவையும் கொண்டு வரப்படவுள்ளன.
பயணிகளும் எச்சரிக்கையுடன் இருந்து, சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக புகாரளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.



