சிலாங்கூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 2 தொழிற்சாலைகள் மூடப்பட்டன

ஷா ஆலாம், நவம்பர் 21 – சிலாங்கூர் ஊராட்சி மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கோலா சிலாங்கூர் ஜெராம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு தொழிற்சாலைகளை மூடப்பட்டன.
இந்தச் சோதனையில் தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN), சுற்றுச்சூழல் துறை (JAS), சிலாங்கூர் நீர் சேவை நிறுவனம் (Air Selangor), தேசிய மின்சார வாரியம் (TNB) மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT Kuala Selangor) உள்ளிட்ட பல ஆணையங்களும் நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன.
மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனுமதியில்லாமல் செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் அனுமதியின்றி கட்டிடத்தையும் அமைத்து, சுத்தமின்மை, தூசு மற்றும் சத்த மாசு ஏற்படுத்துதல் போன்ற பல விதிமுறைகளையும் மீறியிருந்தன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவ்விரு தொழிற்சாலைகளுக்கும் நோட்டீஸை வழங்கி, விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் தண்ணீர் மீட்டர் துண்டிக்கப்பட்டதுடன், TNB மின்மீட்டர் பதிவுகளை சேகரித்த பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகியுள்ளது.
இந்நடவடிக்கையில், இதர 17 தொழில் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொழில் நடவடிக்கைகள் சட்டப்படி நடைபெறவும், மக்களின் நலனை பாதுகாக்கவும், இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் ஊராட்சி மன்றம் அறிவித்துள்ளது.



