
ஹட்ஞாய், நவம்பர்-23 – தென் தாய்லாந்து நகரான சொங்லாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சுமார் 4,000 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதை வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.
அவர்களில் பெரும்பாலோர் ஹட்ஞாயில் (Hatyai) மாடி ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்; எனினும் சிலருக்கு மின்சார வசதி துண்டிப்பு, உணவுக் கையிருப்பு தீர்ந்துபோனது போன்ற பிரச்னைகள் உள்ளன.
இந்நிலையில் உள்ளுர் அதிகாரிகளும் தாய்லாந்து சுற்றுலா போலீஸாரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உரிய உதவிகளை வழங்கி வருவதாக விஸ்மா புத்ரா கூறியது.
அடைமழை இன்று வாக்கில் முடிவுக்கு வந்து வெள்ள நீரும் வற்றத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.
சொங்லா-ஹட்ஞாய் வெள்ளத்தில் சாலைகள் முடங்கியதால் ஆயிரக்கணக்கான மலேசிய சுற்றுப்பயணிகள் சிக்கித் தவிப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின; அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் சுற்றியும் தீவு போல் காட்சியளிக்கும் புகைப்படங்களும் வைரலாகின.
பாதிக்கப்பட்ட சில மலேசியர்கள் சமூக ஊடகங்களிலும் உதவிக் கோரினர்.
அத்தியாவசியப் பொருட்கள் குறைவால் குடும்பங்கள் அவதியுற்ற நிலையில், அவர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதிலும், மீட்பு படகுகளை அனுப்பி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதிலும் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
என்றபோதிலும், ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், தற்போதைக்கு தென் தாய்லாந்துக்கான பயணங்களை ஒத்திவைக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை தற்போது தாய்லாந்து சென்றிருந்தால், வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருப்பதோடு உள்ளூர் அதிகாரிகளின் கட்டளைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



