
கினாபாத்தாங்கான், நவம்பர்-23 – தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவினால், அதற்கு அபராதமாக அக்கூட்டணிக்கு RM50 மில்லியன் செலுத்த வேண்டும்.
இல்லையேல் சட்ட நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
வரும் சனிக்கிழமை நடைபெறும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் இது பொருந்தும் என, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி எச்சரித்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் தற்போது அமுலில் இருப்பதால், கட்சித் தாவலுக்கான சாத்தியங்கள் குறைவே என்றாலும், கூடுதல் தண்டனையாக இந்த அபராதமும் சட்ட நடவடிக்கையும் இருக்கும் என்றார் அவர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது போன்று மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிச் செய்த இது அவசியமென, துணைப் பிரதமருமான அவர் சொன்னார்.
இந்நிலையில், சபாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என்பதால், தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் அனைத்து 45 வேட்பாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சபாவில் 2018-ல் ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் முதல்வர் நாற்காலிக்குத் திரும்ப போராடி வரும் அம்னோ – தேசிய முன்னணிக்கு, இந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாழ்வா தாழ்வா போராட்டமாக அமைந்துள்ளது.



