
மஞ்சோங், நவம்பர்-24 – கடந்த சில தினங்களாக நாட்டில் பல இடங்களில் கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று பேராக் மஞ்சோங்கில் திடீர் புயல் வீசியதில் மக்கள் அச்சத்துக்கும் அவதிக்கும் உள்ளானார்கள்.
புயலின் வேகத்தில் கூரைகள் பறந்து ஏராளமான குடியிருப்புகளும் வாகனங்களும் சேதமடைந்தன.
புயலின் சீற்றத்தை குடியிருப்பாளர் ஒருவர் கைப்பேசியில் பதிவுச் செய்த வீடியோ வைரலாகி பீதியை கிளப்புகிறது.
புயல் கொண்டு வந்த மழையால் ஆயர் தாவார், சித்தியவான் போன்ற இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது.
வீடுகள், கடைவீதிகள் என பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் புகுந்தது.
பல இடங்களில் முட்டிக் கால் வரையிலும் சில இடங்களில் நெஞ்சளவுக்கும் வெள்ள நீர் மட்டம் இருந்ததை சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.
இவ்வேளையில், இன்று காலை வரைக்குமான நிலவரப்படி நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 3,839 குடும்பங்களைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9,384 பேர் மட்டுமே தற்காலிகத் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், ஒரே இரவில் அவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஆக அதிகமாக கிளந்தானில் 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராக்கில் 907 பேரும், பெர்லிஸில் 694 பேரும், கெடாவில் 404 பேரும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பினாங்கில் 381 பேர், திரங்கானுவில் 369 பேர், சிலாங்கூரில் 26 பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முழு விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



