நாய் குதறியதைப் போன்ற முடி வெட்டு; தாயாரின் புகாருக்கு கூலாயில் தலையை மொட்டையடித்து மன்னிப்பு கோரிய சலூன் உரிமையாளர்கள்

ஜோகூர், நவம்பர் 24 – ஜோகூர் கூலாயில், முடி வெட்டி கொண்டு வீடு திரும்பிய தனது மகனின் தலை நாய் கடித்ததைப் போன்று இருப்பதாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தாயார் ஒருவரின் பதிவு வலைதளவாசிகளின் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ‘சலூன்’ உரிமையாளர் உடனடியாக அப்பெண்மணியைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், உரிமையாளர் உட்பட அக்கடையின் மேலாளர்கள் மொத்தம் நான்கு பேர் மொட்டை அடித்து கொண்டு வலைத்தளத்தில் பொது மன்னிப்பு கேட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது விளம்பரத்திற்காக அல்ல என்றும் தங்களது உண்மையான வருத்தத்தைக் காண்பிக்கவே தாங்கள் இவ்வாறு செய்ததாகவும் அந்நால்வரும் தெரிவித்தனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் அனைவரும் தங்கள் தலைகளை மொட்டை அடித்து கொண்டதாகவும், இந்நடவடிக்கை பயிற்சி பெறும் ஊழியர் தவறு செய்தால், மேலாளர் குழுவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அச்சம்பவத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்தச் சலூன் நவம்பர் 30 ஆம் தேதி வரை தங்களது முடி வெட்டுதலில் திருப்தி இல்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற புதிய கொள்கையை அறிவித்துள்ளது.



