
கோலாலம்பூர், டிசம்பர்-2 – மலேசிய இந்துதர்ம மாமன்றம், ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்றும் மாநிலக் கல்வி இலாகாவின் உத்தரவை வன்மையாக கண்டித்துள்ளது.
பொறுப்பற்ற இந்நடவடிக்கை கலாச்சார உணர்வுகளை புறக்கணித்து, பாகுபாடுகளை உண்டாக்கி சமூக ஒற்றுமையை பாதிக்கும் என, மாமன்றம் தனதறிக்கையில் குறிப்பிட்டது.
திருவள்ளுவர் சிலை, தமிழ் இலக்கியத்தின் உயரிய அடையாளமாகவும், கல்வி மற்றும் நெறிமுறை மதிப்புகளின் பிரதிநிதியாகவும் தமிழ்ப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இது மத வழிபாட்டுக்கான சிலை அல்ல என மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு, ஜோகூர் கல்வி இலாகாவின் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டினார்.
எனவே அவ்வுத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதோடு, அவ்வுத்தரவு வழங்கப்பட்டதற்கான தெளிவான விளக்கம் வழங்கவும், இதுபோன்ற இன உணர்வுகள் தொடர்பான முடிவுகளில் முதலில் கலந்துரையாடல் நடத்தவும் மாமன்றம் வலியுறுத்தியது.
மலேசியா மடானி கொள்கையின் அடிப்படையில், இன ஒற்றுமை மற்றும் கலாச்சார நீதியை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமைத் தர வேண்டுமென ரிஷிகுமார் கேட்டுக் கொண்டார்.



