
கெடா, டிசம்பர் 4 – பள்ளிகளில் வெவ்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இரண்டு ஆசிரியர்களை, கெடா மாநில கல்வி இலாகா, மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசாரணை முடியும் வரை அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
15 வயது மாணவியுடன் அவ்விரு ஆசிரியர்களில் ஒருவர், மேற்கொண்ட பாலியல் உரையாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் பின்னர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
மற்றொரு ஆசிரியர் வகுப்பில் அடிக்கடி பாலியல் மற்றும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் தலைமையாசிரியரிடம்தான் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதால் வேறொரு ஆசிரியர் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுக்க முனைந்தபோது “அதிகாரத்தை மீறியதற்காக” அவரும் குற்றவாளியைப் போல வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமூக ஆர்வலரும் முன்னாள் ஆசிரியருமான Fadli Salleh, குற்றம் புரிந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டாலும், மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர் தண்டனையை அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.



