
புத்ரா ஜெயா, டிச 12 – கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங்கில் டிசம்பர் 7 ஆம் தேதி குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் உள்நாட்டு ஆடவர் ஒருவரையும் இந்திய பெண் ஒருவரையும் தடுத்து வைத்துள்ளது. கே.எல்.ஐ.ஏ விலிருந்து வெளியேறும் முகப்பிட சோதனை மையத்தில் வெளியேறியபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்காரியா ஷபான் ( Zakaria Shaaban ) தெரிவித்தார்.
சந்தேக நபர் உண்மையில் ஒரு மலேசிய குடிமகன் என்பதும், அவர் இந்திய கடப்பிதழை பயன்படுத்தியதாக நம்பப்படுவதாகவும் சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. கடப்பிதழ் விவரங்கள் பக்கத்தில் தனது அடையாளத்தை போலியாக உருவாக்கியதாகவோ அல்லது வேறொரு நபருக்குச் சொந்தமான கடப்பிதழைப் பயன்படுத்தியதாகவோ சந்தேகிக்கப்படுகிறது என்று ஷக்காரியா ஷபான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் , ஜாலான் கூச்சிங்கில் உள்ள ஒரு வீட்டில், நாட்டில் அதிக காலம் தங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்தியப் பெண்ணைக் கைது செய்ய வழிவகுத்ததாக அவர் கூறினார். சோதனையின் போது, அந்தப் பெண் சந்தேக நபரான ஆடவரின் மை கார்டுடன் தப்பியோட முயன்ற போதிலும் , அருகேயிருந்த குடிநுழைவு அதிகாரிகள் அப்பெண்ணை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். மலேசியாவில் நீண்ட நாள் தங்கியிருந்ததற்காக அந்த இந்திய பெண் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து இரண்டு இந்திய கடப்பிதழ்கள் மற்றும் கை தொலைபேசியும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டன.



