
வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் 13-ஆவது ஆண்டாக மலர்ந்த ‘மாணவர் முழக்கம்’, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் ஜோகூர், ரினி தமிழ்ப் பள்ளி மாணவன் தஷ்வின் ஸ்ரீ கவியரசு வாகை சூடினார்.
அதன் மாபெரும் இறுதிச் சுற்று, டிசம்பர் 6-ஆம் தேதி பத்து மலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொளி மூலம் பங்கேற்ற நிலையில், 50 பேர் காலிறுதிச் சுற்றிலும், 24 பேர் அரையிறுதியிலும், மாபெரும் இறுதிப் போட்டியில் நால்வரும் களம் இறங்கினர்.
அதில், தனது அபார பேச்சாற்றலால் நடுவர்களைக் கவர்ந்து தஷ்வின் ஸ்ரீ கவியரசு சாம்பியனாக வாகை சூடி RM 5,000 பரிசுப் பணத்தைத் தட்டிச் சென்றார்.
அவருக்கு வெற்றிக் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இரண்டாமிடத்தை பேராக், மகிழம்பூ தமிழ்ப் பள்ளியின் புனிதமலர் ராஜசேகர் பிடித்து, RM4,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிழைப் பெற்றார்.
மூன்றாமிடம் பஹாங், பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப் பள்ளியின் பவதாரணி மருதமுத்து வென்றார்; அவருக்கு RM3,000 ரொக்கம், கேடயம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
நான்காமிடத்தைப் பிடித்த ஜோகூர், மவுண்ட் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ ஷுபகீர்த்தி சுந்தரேசனுக்கு RM 2,750 ரொக்கம் , கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

நம்பிக்கைப் பேச்சாளர்கள் மற்றும் அரையிறுதி வரை வந்து தங்கள் திறமையைக் காட்டிய மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறன், சிந்தனை ஆற்றல், பேச்சுத் திறனை வளர்க்கும் சமூகப் பணியில் வணக்கம் மலேசியா தொடர்ந்து முன்னிலை வகிக்குமென, அதன் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி குறிப்பிட்டார்.
இதனிடையே நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணர்வதாகக் கூறிய சிவகுமார், 13-ஆவது ஆண்டாக போட்டியை சிறப்பாக நடத்திய வணக்கம் மலேசியாவைப் பாராட்டினார்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், சைபர்ஜெயா பல்கலைக் கழகத்தின் தலைவர் தான் ஸ்ரீ பாலன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.
அண்மையில் 7 நாட்களில் 9 மலைகள் ஏறி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற லோகசந்திரனும் சிறப்பு வருகையாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாண்டுப் போட்டியின் சிறப்பம்சமாக, மாணவர்களின் பேச்சாற்றலால் கவரப்பட்ட டத்தோ சிவக்குமாரும் தான் ஶ்ரீ பாலனும், ஒவ்வொரு போட்டியாளருக்கும் தங்களின் சார்பில் 1000 ரிங்கிட் ரொக்கத்தை அன்பளிப்பாக வழங்கினர். இதன் வழி ஒவ்வொரு போட்டியாளரும் வணக்கம் மலேசியா வழங்கிய ரொக்கத்தொகையோடு சேர்த்து கூடுதலாக 2000 ரிங்கிட் ரொக்கத்தை தட்டிச் சென்றனர்.
இதனிடையே போட்டி இவ்வாண்டு போட்டியின் தரம் பெரும் முன்னேற்றம் கண்டிருந்ததாக நீதிபதிகளாக பணியாற்றிய கனல்வீரன் ராஜேந்திரன், முனைவர் ரஹிம் கமாலுடின் கூறினர்.
வாகை சூடிய மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் என சுமார் 200 பேர் இந்த மாபெரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
பத்துமலை ஆலய வளாகத்தில் மாணவர் முழக்கம் போட்டி நடப்பது இது இரண்டாவது முறையாகும். அந்த வகையில், தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ நடராஜாவின் தொடர் ஆதரவுக்கு போட்டியின் ஏற்பாட்டுக் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.



