
புத்ரா ஜெயா டிச 9 – நாடு முழுவதிலும் 387 தமிழ்ப் பள்ளிகளுக்கு Smart Board எனப்படும் 400 விவேக பலகைகளை விநியோகிப்பதற்காக மித்ரா மூலம் அரசாங்கம் 5 மில்லியன் ரிங்கிட்டை இவ்வாண்டு ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய வகை பள்ளிகளில் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்துவதற்காக மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா ,தேசிய கல்வி அறவாரியமான (YDN ) உடன் இணைந்து, ICT உபகரண விவேக பலகை முயற்சியை செயல்படுத்தத் தொடங்கும் நடவடிக்கை இன்று பிரிக்பீல்ட் விவேகனந்தா தமிழ்ப்பள்ளின் கந்தையா மண்டபத்தில் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் உரையாற்றினார்.
கல்வித்துறையின் துணையமைச்சர் , வோங் கா வோ( Wong Kah Woh ) தொழில் முனைவர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் , மித்ராவின் தலைமை இயக்குனர் பிரபாகரன் உட்பட சுமார் 200 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விவேக பலகை வழங்கும் இந்த முயற்சி, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை அணுகுவதை உறுதி செய்வதற்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையின் கீழ் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளது.
கல்வி அமைச்சின் சொத்து மேலாண்மை பிரிவு சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இந்த விவேகப் பலகைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
800க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு ஒரு விவேக பலகை மற்றும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 2 விவேக பலகைகள் வழங்கப்படவுள்ளதாக வணக்கம் மலேசியாவிடம் பேசியபோது டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
விவேக பலகைகளின் விநியோகம் இவ்வாண்டு டிசம்பர் 20 ஆம்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம்தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உபகரணங்களின் விநியோகம் தேவைக்கேற்ப வழங்கப்படுவதையும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்வதில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி அறவாரியம், குறிப்பாக கல்வி அமைச்சின் சொத்து மேலான்மை பிரிவுக்கும் ரமணன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மலேசிய மடானி கொள்கைக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு பலனையும் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் இந்த முயற்சி அரசாங்கத்தின் மற்றொரு உறுதிப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



