
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலேசியாவில் இன அடக்குமுறைக்கு இடமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கும் இந்நாட்டில் நீதி கிடைக்க வேண்டும் என்றார் அவர்.
கடந்த மாதம் மலாக்காவில் 3 இந்திய இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
“அதில் பாதிக்கப்பட்டவர்கள் மலாய்க்காரரா, சீனரா, இந்தியரா என நான் பார்க்கவில்லை; நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் தான் எனது முழு கவனமும்” என அன்வார் சொன்னார்.
அதனால் தான், வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டதாக, மலேசிய கிறிஸ்தவ சம்மேளனம் நடத்திய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசிய போது பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக, செம்பனைத் தோட்டமொன்றில் அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தின் போது தங்களைக் கைதுச் செய்ய முயன்ற ஒரு போலீஸ்காரரை வெட்டி காயப்படுத்தியதை அடுத்து மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை முயற்சி என வகைப்படுத்தி மலாக்கா குற்றப்புலனாய்வுத் துறை அதனை விசாரித்து வந்தது.
எனினும், அதற்கு குடும்பத்தார் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து தற்போது புக்கிட் அமானே அவ்விசாரணையைக் கையிலெடுத்துக் கொண்டுள்ளது.



