
கோலாலம்பூர், டிசம்பர்-14 – அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று, 4.09 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், ரிங்கிட் 4.0945 முதல் 4.1005 வரையிலான அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இது முந்தைய நாளைவிட மேலும் வலுவான நிலை என்பதோடு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பதிவான புதிய உச்சமாகும்.
வணிக வட்டார தகவல்களின் படி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்ததும், நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் மேம்பட்டதும் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைய முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
குறிப்பாக, உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் உயர்வு, ரிங்கிட்டுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
தற்போதைய சூழல் தொடர்ந்தால், ரிங்கிட் குறுகிய காலத்தில் 4.09 முதல் 4.11 வரையிலான அளவில் நிலைநிறுத்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரிங்கிட்டின் இந்த உயர்வு, இறக்குமதி செலவுகளை குறைக்க உதவும் அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு நம்பிக்கையான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.



