
கோம்பாக், டிசம்பர் 15-பத்து மலையில் ஓர் இந்தியர் குடியிருப்பை பாதிக்கும் மறுமேம்பாட்டுத் திட்டம் நிச்சயம் தொடருமென, சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.
வரும் தைப்பூசத்திற்குப் பிறகு அது தொடங்கக் கூடுமென, டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டினார்.
இத்திட்டம், சாலை உள்ளிட்ட அப்பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.
என்றாலும், திட்டம் நடைமுறைக்கு வரும் முன், அங்குள்ள வணிகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் இடமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அமிருடின் உறுதியளித்தார்.
நிலுவையில் உள்ள பிரச்னைகளும் வரும் மாதங்களில் தீர்க்கப்படுமென்றார் அவர்.
இந்நடவடிக்கைகள் சமூக நலனையும், சுற்றுலா வளர்ச்சியையும் சம அளவில் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார்.
இந்த மறுமேம்பாடு, குடியிருப்புக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடுகளைக் கொண்டுவரும் என்றும், புதிய உட்கட்டமைப்பு மற்றும் அதன் குடியிருப்பாளர்களுக்கு முறையான வீடமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டுவரும் என்றும் அமிருடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இடம்பெயர வேண்டியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு, தற்காலிக வாடகை உதவி வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலிக்கும் என அவர் சொன்னார்.
Jalan Bunga Raya 2 மற்றும் Jalan Tepi Sungai இடையேயான சாலைச் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள இக்குடியிருப்பு, மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்னர் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை தங்க வைப்பதற்காக காலனித்துவ ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம், அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு குழுவினர், உடனடி வெளியேற்றத்திலிருந்து அரச பாதுகாப்பைக் கோரி சிலாங்கூர் அரண்மனைக்கு ஒரு மகஜரை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.



