
உத்தரப் பிரதேசம், டிசம்பர் 17 – கடந்த சனிக்கிழமை இரவு, உத்தர பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதியன்று பிறந்த அக்குழந்தையை, பெற்றோர் இருவரும் நடுவில் படுக்க வைத்து தூங்கியுள்ளனர். இருவரும் அவர்களுக்கு அறியாமலேயே இரவில் இடமாற்றம் செய்து உறங்கியதால் குழந்தை இடையில் சிக்கியதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மறுநாள் காலை குழந்தைக்குப் பால் கொடுக்க குழந்தையின் எழுந்தபோது, அக்குழந்தை அசைவில்லாமல் இருந்ததை அவர் கவனித்துள்ளார். அந்நிலையில் அவர்கள் உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுதுதான் மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்ததோடு, மூச்சுத்திணறலே உயிரிழப்புக்குக் முக்கிய காரணமெனவும் தெரிவித்தனர்.
பிறந்ததிலிருந்தே குழந்தை உடல்நலம் குறைவாக இருந்ததுடன், மூச்சுத் திணறல் மற்றும் மஞ்சள் காமாலை பிரச்சினைகளும் குழந்தைக்கு இருந்ததாக உறவினர்கள் மேலும் கூறினர்.
இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் பெரியவர்களுடன் ஒரே படுக்கையில் தூங்க கூடாது என்றும், அது ஆபத்தானது என்றும் குழந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.



