
சமீபத்தில் நடைபெற்ற 79-ஆவது மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா.) பேரவையில், பரிசான் நேஷனல் (BN) கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த முடிவு நாட்டிலே எவ்வித அதிர்ச்சி அலையையும் ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் அறிவர்
இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாகவே BN தலைமையுடனும் ம.இ.கா. தலைமையுடனும் உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை. இந்த விரிசலுக்குக் காரணம், BN தலைமைத்துவம் எடுக்கும் முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து அதன் உறுப்பு கட்சிகளுடன் உரிய கலந்தாலோசனை நடத்தப்படாததே. இதனை ம.இ.கா. தலைமைத்துவம் பலமுறை வெளிப்படையாகக் சொல்லி வந்தது. இந்நிலை ம.இ.கா. உறுப்பினர்களிடையே ஏமாற்றத்தையையும் அதிருப்தியையும் உருவாக்கியது.
15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நாட்டின் மாமன்னரின் வேண்டுகோளின் பேரில் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அக்கட்டத்தில், ம.இ.கா. பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அம்னோ மற்றும் BN தலைமைத்துவம், BN உறுப்பு கட்சிகளிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு வழங்கியது. அதனால் நாடாளுமன்றத்தில் கூடுதல் இடத்தைப் பிடித்து பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை அமைத்தது அனைவரும் அறிந்ததே.
15-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு “DAP வேண்டாம்” , “அன்வார் வேண்டாம்” என முழக்கமிட்ட அம்னோ தலைமைத்துவம், தேர்தலுக்குப் பிறகு, BN உறுப்பு கட்சிகளிடம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்தது, ம.இ.கா.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அம்னோவுக்கு 8 அமைச்சர் மற்றும் 5 துணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட போதும், ம.இ.கா. முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது, ம.இ.கா. இந்த அமைச்சரவையில் இடம்பெறாமல் புறந்தள்ளப்பட்டதை ம.இ.கா. உறுப்பினர்களால் ஜீரணித்துக் கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது.
ம.இ.கா. உறுப்பினர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இருப்பினும், மாமன்னரின் ஆலோசனையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ம.இ.கா. தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தது.
இந்நிலையில், BN- ம.இ.கா– உறவு நீரு பூத்த நெருப்பு போல உள்ளே எரிந்து கொண்டிருந்தது. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ம.இ.கா. பரிசான் கூட்டணியிலிருந்து விலகுவது சிறந்த வழியென பெரும்பாலான ம.இ.கா. உறுப்பினர்கள் கருதினர். இதன் எதிரொலியாக கடந்த 79-ஆவது ம.இ.கா. பேரவையில் பரிசானை விட்டு ம.இ.கா விலக வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த முடிவை விமர்சித்து, ம.இ.கா.வை கிள்ளு கீரை என கருதி இகழ்ந்து பேசும் சில அம்னோ தலைவர்கள், ம.இ.கா. வுக்கு எதிராக அறிக்கையும் இட்டு வருகின்றனர். இவ்வாறு கருத்துரைக்கும் இவர்கள் இந்த நாட்டிற்குச் சுதந்திரம் பெற்ற வரலாற்றினையும்; இந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு ம.இ.கா. அச்சாணி போன்றது என்ற உண்மையையும் இவர்கள் அறிவார்களா?
அம்னோவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட துங்கு அப்துல் ரஹ்மான் மலாயாவுக்குச் சுதந்திரம் வாங்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார். துங்கு ஆங்கிலேய காலனித்துவ அரசுடன் சுதந்திரப் பேச்சு வார்த்தை நடத்த தம் அம்னோ சகாக்களுடன் 1951ஆம் ஆண்டு இலண்டன் சென்றார். ஆனால், இக்குழுவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஆங்கில காலனித்துவ அரசு முன்வரவில்லை. இவரது குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது இதற்கு முக்கியக் காரணம் என சொல்லப்பட்டது
ஆங்கிலேய அரசு மலாயாவுக்குச் சுதந்திரம் கொடுக்க ஆர்வம் காட்டுவதோடு அதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்த மலாய், சீன, இந்திய மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க காலனித்துவ அரசு தயாராக இருந்தது. காலணித்துவ அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் மலாயா திரும்பிய துங்கு அப்துல் ரஹ்மான் இந்நாட்டிலுள்ள சீன, இந்திய சமூகத்தினருடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.
இந்நாட்டில் மலாயாவுக்குச் சுயாட்சி வழங்கும் நோக்கில் 1952-ஆம் ஆண்டு கோலாலும்பூர் மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அம்னோவுக்கு எதிராகத் தேர்தலில் களம் இறங்கிய ஓன் ஜபார் (IMP) கட்சிக்கு ம.இ.கா.வும் தேசிய ம.சீ.சாவும் தங்களது ஆதரவை வழங்கின.
ஆனால், அம்னோவும் கோலாலும்பூர் ம.சீ.சாவும் தமக்கிடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு தேர்தலில் களம் இறங்கின. இக்கூட்டுறவின் விளைவாக ஓன் ஜபாரின் கட்சி படுதோல்வி கண்டது. 12 இடங்களுக்கான தேர்தலில் அம்னோ– கோலாலும்பூர் ம.சீ.சா கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஓன் ஜபார் தலைமையில் போட்டியிட்ட 2 ம.இ.கா. தலைவர்களும் வெற்றி பெற்றனர்.
மீதமிருந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். இத்தேர்தல் முடிவுகள் ம.இ.கா.வுக்குச் சிறந்த அரசியல் பாடத்தைப் புகட்டியது. அதாவது இந்நாட்டில் இந்தியர்களின் அரசியல் எதிர்காலம் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய மலாய் சமூகத்தினருடன் இணைந்து செயல்படுவது என்பதாகும். இதனைக் கருத்தில் கொண்டு ம.இ.கா. தலைமைத்துவம் அம்னோ, ம.சீ.சா கூட்டணியுடன் இணைய ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக இந்தியர்களின் கருத்தையும் ம.இ.கா. தலைமைத்துவம் கேட்டறிந்தது.
பெரும்பாலான இந்தியர்கள் அம்னோ ஓர் இனவாதக் கட்சி என்றும் அதனுடன் இணைவது விவேகமான முடிவல்ல எனவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், தூர நோக்கு சிந்தனையுடைய அன்றைய ம.இ.காவின் தேசிய தலைவர் தேவாசர் ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினர்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி இந்தியர்களின் அரசியல் பலத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் அம்னோ, ம.சீ.சா. கூட்டணியில் 1954-ம் ஆண்டில் ம.இ.கா இணைவதற்கு ம.இ.கா முடிவெடுத்தது.
அதனைத் தொடர்ந்து 1955-ஆம் ஆண்டு நாட்டில் நடந்தேறிய முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ம.இ.கா. களம் இறங்கியது. இத்தேர்தலில் ம.இ.காவுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டன. இவ்விரண்டு இடங்களிலும் ம.இ.கா. மலாய்க்காரர்களின் பெருத்த ஆதரவுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆரசுடன் பேச்சு வார்த்தை நடத்த துங்கு அப்துல் ரஹ்மான் இலண்டன் சென்றார்.
இம்முறை இக்குழுவில் மலாய், சீன, இந்திய பிரதிநிதிகள் இடம்பெற்றதால் ஆங்கில அரசு மகிழ்ச்சியுடன் சுதந்திரம் வழங்க முன்வந்தது என்பது வரலாறு. நாட்டின்1957-ம் ஆண்டு சுந்தந்திரத்துக்குப் பிறகு ம.இ.கா. அம்னோவுடன் கைகோர்த்து அம்னோவின் திட்டங்களுக்கும் அவர்களின் தேர்தல் வெற்றிக்கும் அரணாகவும் துணையாகவும் நின்றதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
இவ்வரலாற்றினை மறந்து செயல்படும் ஒருசில அம்னோ தலைவர்களின் பேச்சு இணக்கமான சூழ்நிலைக்குக் கேடு விளைவிக்கும் என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஆகவே, அரசியல் தலைவர்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, பொறுப்புணர்வுடன் பேசவும் செயல்படவும் வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் தங்களின் எதிர்கால அரசியல் பலத்தை வழுப்படுத்த எடுக்கும் முடிவுகளை அனைவரும் மதிக்க வேண்டும். அவ்வகையில் ம.இ.கா. எடுக்கும் முடிவுகளைக் குறை சொல்லி அறிக்கை விடும் ஒரு சில அம்னோ தலைவர்கள் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்தியர்களின் அரசியல் பலத்தைக் கூட்ட மக்கள் ஒருமித்த ஆதரவை ம.இ.கா.வுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளரான டத்தோ மு. பெரியசாமி.
.



