
கோலாலம்பூர், டிசம்பர் 22 – வரும் டிசம்பர் 25 முதல் 29 வரை நாட்டில் பருவமழை காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலைத் துறையான மெமலேஷியா அறிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக மலேசிய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
METMalaysia வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சமீபத்திய வானிலை மாதிரி பகுப்பாய்வுகள், குறிப்பிட்ட காலப்பகுதியில் தென் சீனக் கடலில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் நிலை மிகக் கலங்கலாக இருக்கும் என்பதை காட்டுகின்றன.
இவ்வகை வானிலை சூழ்நிலை பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, கடல் சார்ந்த செயல்பாடுகள் அதிக பாதிப்பை சந்திக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் வானிலை நிலவரம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து கவனித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மலேசிய வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் myCuaca செயலி மூலமாக சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



