Latestமலேசியா

உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகினார் பெர்லிஸ் மந்திரி பெசார்

கங்கார், டிசம்பர் 25- பெர்லிஸ் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மந்திரி பெசார் மொஹமட் ஷுக்ரி ரம்லி ( Mohd Shukri Ramli) பதவி விலகியுள்ளார்.

உடல் நிலைக் காரணமாக தன்னார்வ அடிப்படையில் தாம் அம்முடிவுக்கு வந்திருப்பதாக அவர் அறிவித்தார்.

முன்னதாக, பெர்லிஸ் ராஜா, துவாங்கு சைட் சிராஜுடின் ஜமாலுலாயிலிடம் (Syed Sirajuddin Jamalullail) அவர் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

சங்லாங் (Sanglang) சட்டமன்ற உறுப்பினருமான 64 வயது ஷுக்ரி ரம்லி, 2022 பொதுத் தேர்தலில் பெர்லிஸில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் 14-கில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு அம்மாநிலத்தின் 10-ஆவது மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ஷுக்ரி ரம்லியின் பெரும்பான்மை குறித்து வதந்திகள் கிளம்பின.

அதாவது, பாஸ் கட்சியின் 9 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர், பெர்சாத்துவின் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டு சேர்ந்து, ஷுக்ரி தலைமைக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை; இந்நிலையில் ஷுக்ரி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென சம்பந்தப்பட்ட அம்மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக, இன்று காலை கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அறிவித்தார்.

கட்சித் தாவல் சட்டத்தின் படி, Chuping, Bintong, Guar Sanji ஆகிய 3 தொகுதிகளும் காலியானதாக சட்டமன்ற சபாநாயகர் Rus’sele Eizan அறிவித்தார்.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 5 ஆண்டு கால முழு தவணை முடிய 2 ஆண்டுகள் இருக்கும் போது இடைத் தேர்தலை நடத்தத் தேவையில்லை.

என்றாலும், மாநில அரசியல் நிலைத்தன்மைக்கு அவ்விடைத் தேர்தல்கள் முக்கியம் என்பதால், அங்கு இடைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு தாம் கோரிக்கை வைக்கப் போவதாக Rus’sele தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!