
கோலாலம்பூர், டிசம்பர் 29 –
நெடுஞ்சாலையின் ஓய்வு மற்றும் சுகாதார நிலையமான R&R-இல், சில கார்கள் முறையற்ற வகையில் நிறுத்தப்பட்டதால் அதாவது ‘பார்க்கிங்’ செய்யப்பட்டதால், லாரிகள் மற்றும் பேருந்துகள் பல மணி நேரங்களாக அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
DashCam Malaysia பகிர்ந்த காணொளிகளில், R&R நிலையத்திற்குள் செல்லும் பிரதான நுழைவுச் சாலையோரமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பாதை குறுகி, கனரக வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியேறவும் முடியாமல் நின்றிருந்தன.
ஒரு காணொளியில், குறுகிய வழியாக செல்ல முயன்ற லாரி ஒன்று தவறாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை உரசியதால் சேதம் ஏற்பட்டது. மற்றொரு காணொளியில், பொதுமக்கள் ஒன்று கூடி ஒரு காரை நகர்த்தி பாதையை சீரமைக்க முயன்றதையும் காண முடிந்தது.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற வாகனங்களுக்கு இடையூறு தரும் வகையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த அதன் உரிமையாளர்களுக்கு காப்பீட்டு சிக்கல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



